சாதி வேறுபாடுகள் அற்ற மயானங்களை கொண்ட சிற்றூர்களுக்கு ரூபாய் 10 லட்சம் பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அதற்காக 11 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. நடைபெற்று முடிந்த சட்டசபையில் முதல்வர் முக ஸ்டாலின் பேசியபோது “திமுக எப்போது ஆட்சி அமைகின்றதோ அப்போதெல்லாம் ஒடுக்கப்பட்டவர்களுக்காகவும், ஒதுக்கப்பட்டவர்களுக்காகவும் பாடுபடுகின்ற அரசாகவே விளங்கும். சமூகத்தில் ஜாதிகளால் புறக்கணிக்கப்படும் அவர்களை அன்பு கரம் கொண்டு அரவணைத்து, அவர்கள் முன்னேறுவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதுதான் திராவிட முன்னேற்ற கழகம் .
அந்தவகையில் தமிழ்நாட்டில் பல கிராமங்களில் ஜாதி வேறுபாடுகள் அற்ற மயானங்கள் பயன்பாட்டில் உள்ளன. இறுதிப் பயணத்திலும் பிரிவினைகள் இருக்கக் கூடாது என்பதில் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக விளங்கும் சிற்றூர்களுக்கு ஊக்கத்தொகையாக வளர்ச்சிப் பணிகளை செயல்படுத்த அரசு சார்பில் 10 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தார். அதற்காக 11 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு தற்போது அரசாணையை வெளியிட்டுள்ளது.