சித்ரா தற்கொலைக்கு அவரின் கணவர் மற்றும் தாய் கொடுத்த மன அழுத்தமே காரணம் என்று காவல்துறை அதிர்ச்சித் தகவலை அளித்துள்ளது.
பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா நேற்று முன்தினம் தனியார் ஹோட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் படப்பிடிப்பில் கலந்து கொண்ட அவர், சென்னையில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் தன் கணவர் ஹேம்நாத்துடன் தங்கியிருந்துள்ளார். அதன்பிறகு அதிகாலை தனது கணவரை வெளியே அனுப்பிவிட்டு, சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இருந்தாலும் அவர் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்தது.
இந்நிலையில் சித்ராவின் உடலை இரண்டு மருத்துவர்கள் பிரேத பரிசோதனை செய்தனர். சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற பிரேத பரிசோதனையில், சித்ராவின் மரணம் தற்கொலைதான் என்று உறுதியாகியுள்ளது. இறந்து கிடந்த சித்ராவின் முகத்தில் காயம் இருந்தது பெரும் சந்தேகத்தை கிளப்பி இருந்தது. ஆனால் பரிசோதனையில் அவரது கன்னத்தில் இருந்த காயம் சித்ராவின் நகக்கீறல் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளிவந்துள்ளது. அதில், “சித்ராவின் தற்கொலைக்கு அவரது கணவர் மற்றும் தாய் கொடுத்த மன அழுத்தமே காரணம். ஹேம்நாத் குடித்துவிட்டு சின்னத்திரை படப்பிடிப்புக்கு சென்று சித்ராவுடன் சண்டையிட்டுள்ளார். சித்ராவின் தாய் விஜயா, கணவரை விட்டு பிரிந்து வர சொல்லி சித்ராவுக்கு அழுத்தம் கொடுத்துள்ளார். அதனால் மனமுடைந்த சித்ரா தற்கொலை செய்து கொண்டார். சித்ராவின் செல்போனில் இருந்த எம்.எம்.எஸ் , புகைப்படங்கள் மற்றும் ஆடியோ உள்ளிட்ட ஆதாரங்கள் அனைத்தும் அளிக்கப்பட்டுள்ளன” என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.