தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் படிப்படியாக ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
அதன் காரணமாக இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமன்றி மாநிலம் முழுவதும் தடுப்பூசி போடும் பணியும் பரிசோதனை எண்ணிக்கையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இருந்தாலும் நேற்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 21 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. அதனால் தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மே 6 ஆம் தேதி முதல் மேலும் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் சென்னையில் கொரோனா நோயாளிகளுக்காக ஆக்சிஜன் வசதி பொருத்தப்பட்ட பேருந்து சேவை இன்று முதல் தொடங்குகிறது. ஜெயின் சங்கம் சார்பில் 4 ஆக்சிஜன் வசதியுடன் கூடிய பேருந்துகளை ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். ஆக்சிஜன் படுக்கை மருத்துவமனையில் கிடைக்கும் வரை கொரோனா நோயாளிகள் பேருந்தில் காத்திருக்கலாம். விரைவில் சென்னையில் 20 முதல் 25 ஆக்சிஜன் பேருந்துகளை பயன்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.