சொத்து குவிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அமைச்சர் கீதா ஜீவன் அவரது தம்பி உட்பட 5 பேர் விடுவிக்கப்பட்டனர்.
தமிழகத்தில் 1996 ஆம் ஆண்டில் இருந்து 2001ஆம் ஆண்டுவரை திமுக ஆட்சி காலத்தில், அப்போது தூத்துக்குடி மாவட்ட செயலாளராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்த பெரியசாமி தனது குடும்பத்தினர் பெயரில் வருமானத்திற்கு அதிகமாக 2.31 கோடி சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் 2003 ஆம் ஆண்டு வழக்கு பதிவு செய்தனர். கடந்த 2003ஆம் ஆண்டு முதல் தூத்துக்குடி நீதிமன்றத்தில் பெரியசாமி மற்றும் அவரது மனைவி எபநேசர், மகன் ஜெகன் பெரியசாமி, அமைச்சர் கீதா ஜீவன் மற்றும் அவரது கணவர் ஜீவன் ஜேக்கப் மற்றும் பெரியசாமி மகன் ராஜா உள்ளிட்ட 6 பேர் மீது வழக்கு நடைபெற்று வந்தது. இதற்கிடையே என். பெரியசாமி 2017ஆம் ஆண்டு உடல்நலக்குறைவால் காலமானார்.
2003 ஆம் ஆண்டு முதல் 19 ஆண்டுகளாக இந்த வழக்கு தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இன்று இந்த வழக்கில் இறுதி தீர்ப்பு வழங்கப்பட்டது. அமைச்சர் கீதா ஜீவன் மற்றும் குடும்பத்தினர் ஆஜராகினர். இந்நிலையில் அமைச்சர் கீதாஜீவன் உள்ளிட்ட 5 பேரையும் விடுதலை செய்து மாவட்ட முதன்மை நீதிபதி குருமூர்த்தி உத்தரவிட்டுள்ளார்.