மருத்துவர்கள் பரிந்துரைத்தும் ஜெயலலிதா ஓய்வெடுக்க மறுத்ததாக அப்போலா மருத்துவர் பாபு மனோகர் ஆறுமுகசாமி ஆணையத்திடம் தெரிவித்தார். மேலும் 2016ஆம் ஆண்டு ஜெயலலிதா பதவியேற்கும் நாளுக்கு முன்பாகவே அவருக்கு மயக்கம், தலைசுற்றல் இருந்ததாகவும் அவர் தெரிவித்தார். ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையம் நேற்று மார்ச் 7 மீண்டும் விசாரணையை தொடங்கியது.
அப்போது நாளொன்றுக்கு 16 மணி நேரம் வேலை இருப்பதாக ஜெயலலிதா கூறினார் என்று ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்பல்லோ மருத்துவர் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்தார். மேலும் சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, ஜெயலலிதா உடல்நிலை, வழங்கப்பட்ட சிகிச்சை குறித்து மருத்துவர்கள் சாட்சியம் அளித்தனர்.
மருத்துவர்கள் வாக்குமூலத்தின்படி ஜெயலலிதாவுக்கு உடல் உபாதைகள் இருந்தது தெரியவந்தது. ஜெயலலிதாவுக்கு இருந்த உடல்நல பிரச்சினைகள் குறித்து மருத்துவர்கள் கூறினார்கள். ஜெயலலிதா மரணம் குறித்து 2 விதமான போக்கில் ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடைபெறுகிறது என்று தெரிவித்தார்.
தற்போது 2-வது நாளாக இன்று (மார்ச் 8) தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் அப்பல்லோ மருத்துவர் மதன்குமார் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார். அதாவது ஜெயலலிதாவுக்கு மாரடைப்புதான் ஏற்பட்டது. சிகிச்சை முறையில் மருத்துவ முறைகள் அனைத்தையும் நாங்கள் முறையாக பின்பற்றினோம் என்று மருத்துவர் மதன்குமார் பதிலளித்துள்ளார்.
இந்நிலையில் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அப்பல்லோ மருத்துவரிடம் சசிகலா தரப்பு வழக்கறிஞர் குறுக்கு விசாரணை நடத்தி உள்ளார். ஜெயலலிதா இறப்பதற்கு முந்தைய நாட்களில் அவருக்கு உயிரை காக்கும் அனைத்து சிகிச்சைகளும் முறையாக அளிக்கப்பட்டதா? என்று சசிகலா தரப்பு வழக்கறிஞர் கேள்வி எழுப்பியுள்ளார்.