தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில், அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால் ஜூன் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. இந்த ஊரடங்கானது நாளையுடன் முடிவடையவுள்ள நிலையில் ஜூன் 21-ஆம் தேதி வரை மேலும் ஒருவாரத்திற்கு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் 11 மாவட்டங்களுக்கு மேலும் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.
அந்த தளர்வுகளின் அடிப்படையில் மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதியளித்துள்ளது. கொரோனா பரவல் ஓரளவிற்கு கட்டுக்குள் வந்ததையடுத்து தான் மதுக்கடைகள் திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில் நாளை முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட உள்ளது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தமிழகத்தில் 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடை திறப்பதற்கு எதிராக பாஜக இன்று ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளது. அதன்படி வீடுகளில் கருப்புக்கொடி ஏந்தி பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு மாநில தலைவர் எல்.முருகன் அறிவித்துள்ளார்.