போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் இளைஞ்ர் தாக்கப்பட்ட விவகாரம் குறித்து மாநில மனிதஉரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கடந்த 18ஆம் தேதி ஓட்டேரி பகுதியில் போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தார்கள். குறிப்பாக ஹெல்மட் அணியாத போக்குவரத்து விதி மீறுவோரை பிடித்து வழக்கு பதிவு செய்து வந்தனர். அப்போது சிறப்பு உதவி ஆய்வாளர் ரமேஷ் என்பவர் அப்பகுதியில் இருசக்கர வாகனம் ஓட்டி வந்த கல்லூரி மாணவர் சுரேந்தர் என்பவரை ஹெல்மெட் அணியவில்லை என்று விசாரணை மேற்கொண்டார். அதில் இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் சிறப்பு உதவி ஆய்வாளர் ரமேஷ் கட்டையால் சுரேந்திரனை தாக்கியுள்ளார்.
இதையடுத்து சுரேந்திரனுக்கு ரத்தம் வந்ததையடுத்து அங்குள்ள மக்கள் சிறப்பு உதவி ஆய்வாளரை தாக்க முற்பட்டனர். அந்த பகுதியை பரபரப்பாக்கிய இந்த விவகாரத்தை வீடியோ எடுத்து சிலர் சமூகவலைதளத்தில் வெளியிட்டதன் காரணமாக இந்த செய்தி மாநில மனித உரிமை ஆணையம் வரை சென்றது.வீடியோ_வை அடிப்படையாக வைத்து மனித உரிமை ஆணையம் போலீசார் மீது வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள். மேலும் இது குறித்து டிஜிபி பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார்கள்.
போக்குவரத்து விதிமீறல் செய்யப்படுவதற்காக சுரேந்திரனை சிறப்பு உதவி ஆய்வாளர் தாக்கியது மனித உரிமை மீறல் இல்லையா ? இதற்க்கு சிறப்பு உதவி ஆய்வாளர் மீது எந்த மாதிரியான நடவடிக்கைகளை எடுத்திருக்கிறார்கள் ? இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடக்காமல் இருக்க காவல்துறை எந்த மாதிரி நடவடிக்கையை மேற்கொள்ள இருக்கிறது என்று அடுக்கடுக்கான கேள்வியை முன்வைத்து தமிழக டிஜிபி, சென்னை மாநகர கூடுதல் போக்குவரத்து ஆணையர் அருண் ஆகியோர் இரண்டு வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு மாநில உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.