டெல்லி வன்முறை சம்பவத்யடுத்து அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் கடும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. டெல்லியில் யமுனா விஹார் என்ற பகுதியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது. குடியுரிமை சட்டத்தை எதிர்த்து போராடுபவர்களுக்கும் , குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக இருப்பவர்களுக்குமிடையே ஏற்பட்ட மோதலில் இந்த வன்முறை நிகழ்ந்துள்ளது.
வடக்கு டெல்லியின் யமுனா விகார் , மஜ்பூர் ஆகிய பகுதிகளில் இந்த வன்முறை சம்பவம் பரவியதையடுத்து அங்குள்ள போராட்டக்காரர்கள் பொதுமக்கள் மீதும் , காவலர் மீதும் கல்லை கொண்டு எறிந்தனர். பெட்ரோல் பங்க், பொதுச்சொத்துக்கள் எரிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து போலீசார் துப்பாக்கிசூடு நடத்தினர்.
இந்நிலையில் டெல்லி காவல்துறை வடக்கு டெல்லி பகுதியில் 10 இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் குற்றவாளிகள் , சமூக விரோதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் டெல்லி மாநில போலீஸ் தெரிவித்துள்ளது. தாஜ்மஹாலை பார்வையிட்டு முடித்த பின் ட்ரம்ப் டெல்லி வர இருப்பது குறிப்பிடத்தக்கது.