திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே நெடுஞ்சாலையோரம் நிறுத்தப்பட்ட தனியார் பேருந்தின் பின் பக்கம் 108 ஆம்புலன்ஸ் மோதிய கோர விபத்தில் இருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் இருந்து 108 ஆம்புலன்ஸ், 2 நோயாளிகளையும் அவரது உறவினரையும் ஏற்றிக்கொண்டு மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தது.
அப்போது சத்திரப்பட்டி அருகே திண்டுக்கல் நோக்கி சென்று கொண்டிருந்த சுவாமி டிரான்ஸ்போர்ட் என்ற பேருந்து, பயணிகளை இறங்குவதற்காக சாலையோரம் திடீரென நிறுத்தப்பட்டுள்ளது. அதனை எதிர்பாராத ஆம்புலன்ஸ் ஓட்டுனர் பேருந்தின் பின்பக்கம் பயங்கரமாக மோதி உள்ளார். அந்தக் கோர விபத்தில் ஆம்புலன்ஸ் முன்பகுதி நொறுங்கியது. ஆம்புலன்சில் இருந்த நோயாளி ஒருவரும் அவரது உறவினரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். ஆம்புலன்ஸ் ஓட்டுநருடன் உதவிக்கு வந்திருந்த செவிலியர் படுகாயமடைந்தார். பேருந்தின் ஓட்டுநர் ரமேஷ் குமாரை போலீசார் கைது செய்தனர்.