தமிழகத்தில் புதிய சாலை திட்டங்கள் அமைக்கப்படும் என பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
இந்திய வரலாற்றில் முதல் முறையாக டிஜிட்டல் வடிவில் மத்திய நிதிநிலை அறிக்கையை மூன்றாவது முறையாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார். அதன் பிறகு அவர் ஆற்றிய உரையில், “கொரோனாவால் பொருளாதாரம் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் மக்கள் சிரமப்படாமல் இருக்க ஏழைகள் நலவாழ்வு நிதி உதவியை பிரதமர் மோடி தொடங்கினார்.
மேலும் காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் மூலம் மத்திய அரசுக்கு 140 கோடி மிச்சமாகும். பொது முடக்கத்தை அமல்படுத்தாமல் இருந்திருந்தால் கொரோனாவால் மிகப் பெரும் சேதத்தை சந்தித்திருக்க நேர்ந்திருக்கும். பொது விநியோகத் திட்டத்தின் கீழ் தானியங்கள் இலவசமாக வழங்கப்பட்டன. கொரோனா காலத்தில் பணியாற்றிய முன் களப் பணியாளர்களுக்கு நன்றி” என அவர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ரூ.1.03 லட்சம் கோடியில் புதிய சாலை திட்டங்கள் அமைக்கப்படும் என பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். தமிழகம் மற்றும் கேரளாவை ஒருங்கிணைக்கும் வகையில் சாலைத் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. மதுரையிலிருந்து கொல்லம் வரை நவீன வசதிகளுடன் கூடிய நெடுஞ்சாலை அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் கன்னியாகுமரி-கேரளாவின் பல பகுதிகளை இணைக்க நவீன வசதிகளுடன் கூடிய புதிய சாலைகள் அமைக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.