தமிழகத்தில் இந்த வருடத்தின் தொடக்கத்தில் குறைவாக இருந்த கொரோனா பாதிப்பு,கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இதுவரை இல்லாத புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி முதலில் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
ஆனாலும் கொரோனா பாதிப்பு குறையாத காரணத்தால் கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன் பலனாக நேற்று தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்தது. கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேறாமல் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். அதனால் தங்களின் அன்றாட வாழ்க்கையை இழந்து தவித்து வருகிறார்கள்.
மேலும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பு நடவடிக்கைகளும், தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்திலேயே கொரோனா தடுப்பு ஊசி மற்றும் ஆக்சிஜன் உற்பத்தியை தொடங்க முதல்வர் ஸ்டாலின் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார். மருத்துவ உயர் தொழில்நுட்ப சாதனங்கள், ஆக்சிஜன், செறியூட்டிகளையும் தமிழகத்திலேயே உற்பத்தி செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. உற்பத்தி நிறுவனங்களுக்கு தமிழக அரசின் தொழில் வளர்ச்சி நிறுவனம் தேவையான உதவிகளை வழங்கும் என்று ஸ்டாலின் அறிவித்துள்ளார்.