தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட மூன்றாவது அணி உருவாக திட்டமிடப்பட்டு இருப்பதால் பரபரப்பு உருவாகியுள்ளது.
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று இன்று அறிவிக்கப்பட்டது. அதனால் கடந்த இரண்டு மாதங்களாக அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்த தேர்தல் பிரசாரம் செய்து வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இதற்கு மத்தியில் கூட்டணி குறித்த குழப்பம் நிலவி வருகிறது.
அதுமட்டுமன்றி தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி கடந்த சில நாட்களாக அதிமுக தமிழகத்தில் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை தொடர்ந்து செய்து வருகிறது. இந்நிலையில் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்து விலகி விட்டதாக சமக கட்சித் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மையம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசனுடன் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் சந்தித்து பேசி வருகிறார். இருவரும் சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுவது தொடர்பாக ஆலோசித்து வருகிறார்கள். மக்கள் நீதி மையம்- சமத்துவ மக்கள் கட்சி- ஐஜேகே-குடியரசு கட்சி-ஆம் ஆத்மி-காந்தி மக்கள் இயக்கம் உள்ளிட்ட கட்சிகள் இணைந்து மூன்றாவது அணியை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. மக்கள் நல கூட்டணியைப் போல், இந்தத் தேர்தலில் மூன்றாவது அணி உருவாகுவதால் தேர்தலில் பரபரப்பு உருவாகியுள்ளது.