தமிழக முதலமைச்சராக இன்று காலை 9 மணியளவில் ஆளுநர் மாளிகையில் எளிமையான முறையில் ஸ்டாலின் பதவியேற்பு விழா நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து “முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்” என்று கூறி தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றார். இதையடுத்து முதலமைச்சராக பதிவேற்றதையடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் Chief Minister Of Tamil Nadu என மாற்றினார் முதல்வர் மு.க.ஸ்டாலின். இதை திமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்து கோப்புகளில் கையெழுத்திட்டு தனது பணிகளைத் தொடங்கினார் ஸ்டாலின். இதையடுத்து மாலை 5 மணி அளவில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், தமிழகத்தில் அடுத்த இரண்டு வாரங்களில் கொரோனா அதிகரிக்க வாய்ப்புள்ளது. மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்த வேண்டிய அவசர, அவசிய தேவை ஏற்பட்டுள்ளது.
தமிழக மக்களின் வாழ்வாதாரம் வாழ்க்கையை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு உள்ளது என்றார். மேலும் ஆலோசனைக்கு பிறகு மேலும் கூடுதல் கட்டுப்பாடுகள் குறித்து அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.