தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் ஏப்ரல் 2 முதல் 5 ஆம் தேதி வரை பள்ளிகள் திறந்திருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இதனையடுத்து 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கிக் கொண்டிருப்பதால், பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டு பள்ளிகள் திறக்கப்பட்டன. தற்போது தமிழகம் முழுவதிலும் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன.
மேலும் 12ஆம் வகுப்பு மாணவர்களை தவிர மற்ற அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்வு இல்லாமல் ஆல் பாஸ் செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. ஆனால் தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. பெரும்பாலும் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது. இதற்கு மத்தியில் தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். அதில், வாக்குச்சாவடி மையங்களில் கேமரா பொருத்தும் பணி நடைபெற இருப்பதால் ஏப்ரல் 2 முதல் 5 ஆம் தேதி வரை பள்ளிகள் திறந்திருப்பதை முதன்மை கல்வி அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.