தமிழகத்தில் நீலகிரி, கோவை, திண்டுக்கல்,தென்காசி மற்றும் தேனியாகிய ஐந்து மாவட்டங்களில் இரண்டு நாட்களுக்கு கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தென்மேற்கு பருவமழை காரணமாக கர்நாடகா மற்றும் ஆந்திரா உள்ளிட்ட பல மாநிலங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு மிக பலத்த மழைக்கான ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீலகிரி மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நேற்று ‘ஆரஞ்சு அலர்ட்’ அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் நீலகிரி, கோவையில் அதிகபட்சமாக 21 செமீக்கு மேல் மிக பலத்த மழை பெய்யும் என இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கோவையில் மே.தொடர்ச்சி மலைப்பகுதியிலும் மிக பலத்த மழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.