தமிழகத்தில் கொரோனா மூன்றாவது அலை தாக்கம் காரணமாக ஜனவரி 31ஆம் தேதி வரை மூடப்பட்டிருந்த பள்ளி, கல்லூரிகள் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் திறக்கப்பட்டு தற்போது நேரடி வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் கொரோனா நோய் பரவல் காரணமாக பள்ளிகளில் இந்த ஆண்டுக்கான காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகள் நடத்தப்படவில்லை. அதற்கு பதிலாக இரண்டு திருப்புதல் தேர்வுகள் நடத்த திட்டமிடப்பட்டது. தற்போது முதலாவது திருப்புதல் தேர்வு கடந்த 9 ஆம் தேதியிலிருந்து நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் நேற்று (பிப்.14) நடைபெற இருந்த 10 ஆம் வகுப்பு அறிவியல் தேர்வு மற்றும் 12 ஆம் வகுப்பு கணித தேர்வுகளுக்கான வினாத்தாள்கள் வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமூக வலைதளங்களில் கசிந்து பல்வேறு தரப்பினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து இன்று நடைபெற உள்ள 10-ஆம் வகுப்பு திருப்புதல் தேர்வு சமூக அறிவியல் வினாத்தாளும் கசிந்தது. அதேபோல் பிப்ரவரி 17-ஆம் தேதி நடைபெற இருந்த ஆங்கில வினாத்தாளும் கசிந்துள்ளது. அதனை தொடர்ந்து 12 ஆம் வகுப்பு வணிகவியல் திருப்புதல் தேர்வு வினாத்தாளும் சென்னையில் இருந்து கசிந்துள்ளதாக தகவல் வெளியானது.
நேற்று முன்தினம் கணித தேர்வுக்கான வினாத்தாள் கசிந்த நிலையில் நேற்று பிற்பகல் 2 மணிக்கு தொடங்கிய 12 ஆம் வகுப்பு வணிகவியல் தேர்வுத்தாள், தேர்வுக்கு முன்கூட்டியே கசிந்துள்ளதாக புகார் எழுந்தது. எனவே இன்று முதல் வினாத்தாள் பள்ளிகளுக்கு முன்கூட்டியே வழங்கப்படமாட்டாது என்று தேர்வுத்துறை தெரிவித்திருந்தது. ஏற்கனவே பிளஸ் 2 உயிரியல் திருப்புதல் தேர்வு வினாத்தாள் லீக் ஆன நிலையில் மேலும் ஒரு வினாத்தாள் லீக் ஆகியுள்ளது. இதனால் இன்று நடைபெற உள்ள திருப்புதல் தேர்வு ஒத்திவைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.