தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு கடந்த மே 10ஆம் தேதி அமல்படுத்தப்பட்டது. அதில் பல கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால், கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வந்தது. அதனால் படிப்படியாக ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்துக் கொண்டே வருகிறது. முதலில் பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும், எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வு வழங்கப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு ஓரளவு குறைந்த காரணத்தால் அனைத்து மாவட்டங்களிலும் ஒரே மாதிரியான தளர்வுகள் அறிவிக்கப்பட்டு ஜூலை 31 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் கடும் ஊரடங்கு பின்பற்றப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. நோய்த்தொற்று பரவலை கண்காணிக்க , குழுக்கள் அமைக்கப்பட்டு வீடு வீடாக தீவிரமாக கண்காணிக்கப்படும். அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அவசியம் என்றே வீட்டிலிருந்து வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.