தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டு வரும் ஊரடங்கினால் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. முன்னதாக நீடிக்கப்பட்ட ஊரடங்கில் பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும் எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் வழங்கப்பட்டன.இந்த ஊரடங்கு இன்றுடன் முடிவடைய இருந்த நிலையில் ஜூலை-12 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதில் அனைத்து மாவட்டங்க்ளுக்கும் ஒரே வகையான தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று காலை முதல் கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலுக்கு வந்தது. இதில் தமிழகம் முழுவதும் கடைகள் இரவு 8 மணி வரை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஹோட்டல்கள் 50% வாடிக்கையாளர்களுடன் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்பட அனுமதி. ஹோட்டல்களில் வாடிக்கையாளர்கள் அமர்ந்து உண்ணவும், டீக்கடைகளில் அமர்ந்து தேநீர் அருந்தவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.