தமிழகத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அதனால் அடுத்து வரும் மழைக்காலத்தில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுரை வழங்கிய முதல்வர் ஸ்டாலின், தேவைப்படும் இடங்களில் நிவாரண முகாம்கள் அமைத்து பொது மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரவும் அத்தியாவசிய பொருட்கள் தங்கு தடையின்றி கிடைப்பதை உறுதி செய்யவும் உத்தரவிட்டு உள்ளார்.
மேலும் அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகள் பாதிக்கப்படாத வகையில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்ய வேண்டும். மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை தாமதமின்றி வழங்க வேண்டும் என நீலகிரி, குமரி, தென்காசி, நெல்லை மற்றும் நாமக்கல் மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல் மழைக்காலத்தில் நோய்த்தொற்று பரவாமல் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.அவசர உதவிக்கு கட்டுப்பாட்டு மையத்தின் 1070 என்ற எண்ணில் மக்கள் அழைக்கலாம் என்று முதல்வர் கூறியுள்ளார்.