நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை மீண்டும் வேகம் எடுத்து வருகிறது. இதையடுத்து தமிழகத்திலும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் நாளுக்கு நாள் இறப்பு வீதமும் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இது ஒருபுறம் இருக்க மறுபுறம் ஆக்சிஜன் தட்டுப்பாட்டின் காரணமாக பல கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். எனவே ஆக்சிஜனை விரைந்து வழங்க பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதையடுத்து கொரோனா அதிகரித்து வருவதால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை நடத்தி தமிழகத்தில் இரவு ஊரடங்கு மற்றும் ஞாயிறு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா அதிகரித்து வருவதன் காரணமாக டாஸ்மாக் மதுக்கடைகளை மூட உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கோவில்களில் வழிபட தடை விதித்த போதிலும் மதுக்கடைகளுக்கு எந்த கட்டுப்பாடும் விதிக்கவில்லை எனக் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.