நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது.
மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி ஏப்ரல் 10 முதல் புதிய கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் மாநிலம் முழுவதும் கண்காணிப்பு பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இருந்தாலும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு உயிரிழப்பு எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், கட்டுப்பாடுகள் விதிப்பது பற்றி முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னை தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இதனையடுத்து தமிழகத்தில் கொரோனாவை கட்டுபடுத்த இன்று முதல் இரவு 10 மணி முதல் அதிகாலை நான்கு மணிவரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இந்நிலையில் வடமாநிலங்களை தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அடுத்தடுத்து பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. முதல் டோஸ் தடுப்பு ஊசி போட்ட பலரும் இரண்டாவது டோஸ் போட முடியாமல் தவிப்புக்கு ஆளாகியுள்ளனர். பல இடங்களில் தடுப்பூசி போடாமல் திருப்பி அனுப்பப்படுகிறார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.