தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் படிப்படியாக ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
அதன் காரணமாக இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமன்றி மாநிலம் முழுவதும் தடுப்பூசி போடும் பணியும் பரிசோதனை எண்ணிக்கையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இருந்தாலும் நேற்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 23 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. அதனால் தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த இன்றுமுதல் மேலும் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் தமிழ்நாட்டில் ஆக்சிஜன் கையிருப்பு நாளை வரை மட்டுமே இருப்பதாக தமிழ்நாடு அரசு உயர்நீதிமன்றத்தில் அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளது. மத்திய அரசு தமிழகத்திற்கு ஒதுக்கீடு செய்த ஆக்சிஜனை வழங்காத பட்சத்தில் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது. இந்நிலையில் நாளைக்குள் ஆக்சிஜன் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.