தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் திறந்தால் தான் மாணவர்கள் பொதுத் தேர்வுகளை நம்பிக்கையோடு எதிர்கொள்ள முடியும் என அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. கடந்த மாதம் பள்ளிகள் திறக்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்த நிலையில், பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து அந்த அறிவிப்பு ரத்து செய்யப்பட்டது. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு மாதிரித் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகளை நடத்துவது தொடர்பாக சிபிஎஸ்இ தமிழகத்தில் பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து தமிழக அரசின் நிலைப்பாட்டை கோரியுள்ளது.
இதனையடுத்து பள்ளிகள் திறக்கப்பட்டு சில நாட்களாவது வழக்கமான முறையில் வகுப்புகள் நடந்தால்தான் மாணவர்கள் பொதுத் தேர்வுகளை நம்பிக்கையோடு எதிர்கொள்ள முடியும். மேலும் சுகாதார நிபுணர்கள் தவிர பெற்றோர் மற்றும் ஆசிரியர்களிடம் கருத்துக்கள் மீண்டும் சேகரிக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.