தமிழகத்தில் எப்போது பள்ளிகளைத் திறக்கலாம் என இன்று முதல் கருத்து கேட்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் வகுப்புகள் மற்றும் கல்வி தொலைக்காட்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது பற்றியும் பெற்றோர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. ஆனால் அதற்கு பெற்றோர்கள் அனைவரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் பள்ளிகள் திறப்பது பற்றி எந்த ஒரு அறிவிப்பையும் தமிழக அரசு வெளியிடவில்லை.
அதனால் கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் திறக்கப்பட வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு குறித்த அட்டவணை, சட்டமன்ற தேர்தல் அறிவிப்புக்கு பிறகு வெளியிடப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். மேலும் பள்ளி மாணவர்களுக்கு பொதுத் தேர்வு எப்போது நடத்துவது என்பது குறித்து முதல்வருடன் கலந்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
இதனையடுத்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இடம் இந்த வாரம் இறுதிவரை கருத்து கேட்கப்படும் என்றும் பள்ளிகள் திறந்த உடன் அரசு பள்ளி மாணவர்களுக்கு டேப் வழங்கப்படும் எனவும் கூறியுள்ளார். அதுமட்டுமன்றி பள்ளி தேர்வு, பொதுத்தேர்வு குறித்து மருத்துவ குழுவினருடன் ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கப்படும் என முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.