சேலம் மாவட்டம் அரசினர் மகளிர் பள்ளியில் ஆசிரியருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இதற்கு மத்தியில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கிக் கொண்டிருப்பதால், மாணவர்களின் பெற்றோர்களிடம் பள்ளிகள் திறப்பது பற்றி கருத்து கேட்கப்பட்டது. அதற்கு 90% பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்த நிலையில் ஜனவரி 19ஆம் தேதி 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. தற்போது அரசு பள்ளிகளில் 92 சதவீத மாணவர்கள் வருகை புரிந்துள்ளதால் வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் சேலம் மாவட்டம் கோட்டை அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி திறக்கப்பட்டதால், அங்கு பணியாற்றும் ஆசிரியர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பே உறுதியாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு காய்ச்சல் ஏற்பட்டதையடுத்து நடத்திய பரிசோதனையில் ஆசிரியருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதனையடுத்து அவர் வீட்டில் தன்னை தனிமைப்படுத்தி கொண்டுள்ளார். அதனால் அப்பள்ளி சக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.