தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால் ஜூன்-14 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து ஜூன் 21-ஆம் தேதி வரை மேலும் ஒருவாரத்திற்கு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் தொற்று அதிகமுள்ள 11 மாவட்டங்கள் தவிர்த்து மற்ற 27 மாவட்டங்களுக்கு சில தளர்வுகள் அளிக்கப்பட்டது.
இந்நிலையில் தமிழகத்தில் புதிய தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்த உள்ளார். அதில் பொது போக்குவரத்து சேவைக்கு அனுமதி, சிறிய ஜவுளி கடைகளுக்கு அனுமதி, சிறிய வழிபாட்டு தலங்களுக்கு அனுமதி அளிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கடைகளுக்கான நேர அனுமதியை அதிகரித்தல் உள்ளிட்ட தளர்வுகள் அரசால் வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.