தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் மருத்துவ நிபுணர்களுடன் கடந்த சில நாட்களாகவே ஆலோசனை நடத்தி வந்தார். அந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படுவது மற்றும் பள்ளிகள் மூடுவது குறித்த கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகளை அமல்படுத்தி தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் இன்று முதல் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் நேற்று 4,862 ஆக இருந்த கொரோனா பாதிப்பு இன்று 6,983-ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு 27,67,432 -ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் 11 பேர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 36,825-ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 721 பேர் டிஸ்சார்ஜ் ஆன நிலையில், குணமடைந்தோர் எண்ணிக்கை 27,07,779 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 27,828 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.