தமிழகத்தில் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், ஊரடங்கு தளர்வு களை அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார்கள். ஆனால் தமிழகத்தில் கடந்த 2 வாரமாக கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதனால் மக்கள் அனைவரும் அச்சமடைந்துள்ளனர். இதற்கு மத்தியில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடந்ததால், ஊரடங்கு குறித்த எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
இந்நிலையில் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் எந்தவித தளர்வும் இல்லாமல் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என்று தமிழக அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வர இ பதிவு கட்டாயம். இறுதி ஊர்வலங்களில் 50 பேர் வரை மட்டுமே பங்கேற்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் உள்ளரங்க நிகழ்வுகளில் அதிகபட்சமாக 200 நபர்களுக்கு மட்டுமே அனுமதி தரப்பட்டுள்ளது.