தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஏற்கனவே அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கை நீட்டித்து மேலும் ஒரு வாரத்திற்கு (மே-31 வரை) தளர்வுகளற்ற கடுமையான ஊரடங்கை அமல்படுத்தியிருந்தது . இதனால் தொற்று பாதிப்பு சற்று குறைந்து வருவதாக முதல்வர் அறிவித்திருந்தார்.
இதனைத்தொடர்ந்து மேலும் ஒரு வாரம், அதாவது ஜூன் 7-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது குறித்து முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். அதில் கடந்த ஒருவார கால ஊரடங்கால் நோய்த்தொற்று எண்ணிக்கை ஓரளவு குறைந்து வருகிறது. நோய் தொற்று வரைபடம் தட்டையான நிலையை எட்டவே ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் மக்களின் தேவைகளை கருத்தில் கொண்டு 13 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.