தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை முடிந்து வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது. அக்டோபர் முதல் டிசம்பர் வரை வடகிழக்கு பருவமழை காலம் ஆகும். ஒவ்வொரு வருடமும் அக்டோபர் இரண்டாவது வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும். கடந்த வருடம் அக்டோபர் 28ஆம் தேதி பருவமழை தொடங்கியது. இரண்டு புயல்கள் உருவானதால் அதிக அளவு மழை கிடைத்தது. இயல்பை விட 6 சதவீதம் அதிக மழை தமிழகத்திற்கு கிடைத்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இந்த வருடம் தென்மேற்கு பருவமழை இயல்பை விட அதிக அளவு மழையை கொடுத்துள்ளது. தென்னிந்திய பகுதிகளில் இன்று முதல் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சூழல் உருவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்தது.
இந்நிலையில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு மட்டுமன்றி புதுச்சேரி, கேரளா மற்றும் தெற்கு ஆந்திரப் பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது. வழக்கத்தை விட இந்த ஆண்டு இருபத்தி மூன்று சதவிகிதம் அதிக அளவில் மழை கொடுக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அது மட்டுமல்லாமல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 5 நாட்களுக்கு தொடர்ந்து கனமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.