தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தது. அப்போது மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்த நிலையில், அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்ததால் கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது.
ஆனால் தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் மாணவர்களின் நலனைக் கருதி 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அனைவரும் நடப்பு கல்வியாண்டில் ஆல் பாஸ் செய்யப்படுவார்கள் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவது குறித்து பள்ளி கல்வித்துறை திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படுமா என்று சந்தேகம் எழுந்துள்ளது. இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில், தமிழகம் முழுவதும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாயம் பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சற்றுமுன் தெரிவித்துள்ளார்.