தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் அரபிக் கடலில் புதிதாக ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்திய வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக் கடலில், தெற்கு கர்நாடகா – கேரள கடலோர பகுதிக்கு அருகே உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி,மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெறும்.
இதனை தவிர வங்கக்கடலில் ஏற்கனவே உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறும் என்றும் இன்று தெற்கு ஆந்திரா மற்றும் வடக்கு தமிழகம் கடலோரப் பகுதியை நெருங்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் அதி கனமழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.