தமிழகத்தில் 738 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் 8 பேர் உயிரிழந்துள்ளார்கள் என்று சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தமிழகத்தில் மேலும் 48 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது என்று தெரிவித்தார். இதனால் தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 738 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஆய்வு முடிவுக்காக 344 பேர் காத்திருக்கின்றனர். முகக் கவசங்கள் போதுமான அளவில் இருக்கின்றது. தமிழகத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. 72 வயது முதியவர் உட்பட 21 பேர் கொரோனா தொற்று நோயிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தமிழகத்தில் 34 மாவட்டங்கள் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. வீட்டு கண்காணிப்பில் 60 ஆயிரத்து 239 பேரும், அரசு கண்காணிப்பில் 230 பேரும் உள்ளனர் என்று சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.