தமிழகம் உள்ளிட்ட 11 மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்துவது பற்றி மத்திய அரசு இன்று தீவிர ஆலோசனை நடத்துகிறது.
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்படி இந்தியாவிலும் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அப்போது போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதன் பிறகு நாட்டின் பொருளாதாரமும் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால், கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு ஊரடங்கு தளர்வு கள் அறிவிக்கப்பட்டன.
அதன் பிறகு தற்போது வரை நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு குறைந்து கொண்டே வந்தது. அதனால் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார்கள். இந்நிலையில் மகாராஷ்டிரா, கேரளா, பஞ்சாப், குஜராத், கர்நாடகா மற்றும் தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது.
அதனால் மத்திய அரசு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் மீண்டும் ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. தமிழகத்தில் மீண்டும் இன்று பாதிப்பு அதிகரித்து உள்ளதால் கடும் கட்டுப்பாடுகள் விதிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கொரோனா அதிகரிப்பால் தமிழகம் உள்ளிட்ட 11 மாநில தலைமைச் செயலாளர்கள் உடன் இரவு நேர ஊரடங்கு, கட்டுப்பாடு விதிப்பது, புதிய நெறிமுறைகளை அமல்படுத்துவது தொடர்பாக மத்திய அரசு இன்று தீவிர ஆலோசனை நடத்துகிறது. தமிழகத்தில் கடந்த வாரம் 500 ஆக இருந்த கொரோனா பாதிப்பு 3 ஆயிரத்தை நெருங்கியதால், தேர்தலுக்கு பிறகு கடும் கட்டுப்பாடுகள் குறித்து மிக முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.