தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் பைக் பேரணிக்கு தடை விதிக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதற்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.
அதுமட்டுமன்றி தாங்கள் போட்டியிட விரும்பும் ஒவ்வொரு தொகுதியிலும் வேட்பாளர்கள் அனைவரும் வேட்புமனு தாக்கல் செய்தனர். தமிழகத்தில் கடந்த மூன்று நாட்களாக வேட்புமனு பரிசீலனை நடந்து கொண்டிருக்கிறது. இதனையடுத்து தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் நடத்துவதற்கான விதிமுறைகளை தேர்தல் ஆணையம் அவ்வப்போது வெளியிட்டு கொண்டே வருகிறது. அதனால் மாநிலம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் தமிழகம், புதுச்சேரி, கேரளா மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் பைக் பேரணிக்கு தடை விதிக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வாக்குபதிவு 72 மணி நேரத்திற்கு முன்பாக அரசியல் கட்சிகள் பைக் பேரணி நடத்த தடை விதிக்கப்படுவதாகவும், வாக்குப்பதிவு அன்றும் இருசக்கர வாகன பேரணிக்கு அனுமதி அளிக்கக் கூடாது எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.