தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால் கட்டுப்பாடுகளை கடுமையாக்குவது தொடர்பாக முதல்வர் முக.ஸ்டாலின் மீண்டும் இன்று ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். ஒமிக்ரான் வகை கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் நாடு முழுவதும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தமிழகத்திலும் கடந்த டிசம்பர் 31-ஆம் தேதியன்று புதிய கட்டுப்பாடுகளை மாநில அரசு அமல்படுத்தியது. இந்த கட்டுப்பாடுகளானது ஜனவரி 10-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனிடையில் தொடர்ந்து தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வந்த நிலையில் நேற்று முதல்கட்ட ஆலோசனையை முதல்வர் மேற்கொண்டார். இதையடுத்து கலைவாணர் அரங்கில் மருத்துவத்துறை, அமைச்சர் மா.சுப்பிரமணியன், செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகளுடன் இன்று மீண்டும் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு பதிலளிக்கும் வகையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளார்.