தமிழகத்தில் டெல்டா மற்றும் ஒமிக்ரான் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் முகக்கவசம் அணிந்து மக்கள் அனைவரும் சமூக இடைவெளியை முறையாக பின்பற்ற வேண்டும் என்று அரசு வலியுறுத்தியுள்ளது. மேலும் புதிய கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு ஜனவரி 10-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளார். மாஸ்க் போடாதவர்களிடம் அபராதம் வசூல் செய்ய தயக்கம் காட்டத் தேவையில்லை.இனி மாஸ்க் போடாதவர்களிடம் 100 ரூபாய் முதல் ஆயிரம் ரூபாய் வரை அபராதம் வசூலிக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார். இந்தக் கட்டுப்பாடுகள் அனைத்தும் தமிழகம் முழுவதும் அமலுக்கு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.