இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அரசுக்கு உறுதுணையாக மருத்துவர்கள் முதல் சுகாதாரத்துறை பணியாளர்கள் வரை அனைவரும் பணியாற்றி வருகிறார்கள். கொரோனா காலகட்டத்தில் அவர்களின் பணி இன்றியமையாதது. ஆனால் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் சிலர் உயிரிழக்கும் அபாயம் ஏற்படுகிறது. இந்நிலையில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு உயிரிழக்கும் மருத்துவ பணியாளர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி தரலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் யோசனை வழங்கியது.
இந்நிலையில் தமிழகத்தில் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுவரும் சுகாதார பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி தூய்மைப் பணியாளர்கள், 108 அவசர ஊர்தி, 104 அமரர் ஊர்தி பணியாளர்களுக்கு 15,000, மருத்துவர்களுக்கு 30 ஆயிரம், முதுநிலை மருத்துவர்களுக்கு 20000, பயிற்சி மருத்துவர்களுக்கு 15000, செவிலியர்களுக்கு 20,000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.