தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மக்களைத் தேடிச் சென்று ஆங்காங்கே தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது வரை 7 மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. அதில் மக்கள் அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் சென்று தடுப்பூசி செலுத்தி கொண்டனர். ஒவ்வொரு முகாமிலும் அரசு நிர்ணயித்த இலக்கை விட அதிக அளவு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
இந்நிலையில் நாளை 8வது மெகா தடுப்பூசி முகாம் தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் நடத்தப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தற்போது 70 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளது. மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படும். சென்னையில் 2,000 இடங்களில் தடுப்பூசி முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.நவம்பர் இறுதிக்குள் 100% தடுப்பூசி என்ற இலக்கை எட்ட தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.