பள்ளிகளில் மதிய உணவு திட்டத்தில் வாழைப்பழம் வழங்குவது குறித்து அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் பெண்கள் மாதிரி மேல்நிலைப் பள்ளியில் கல்வி பயிலும் 3197 பேருக்கு விலையில்லா புத்தகத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் தமிழகத்தில் உள்ள பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகளை ஆய்வு செய்து வருவதாகவும், இது குறித்து ஜூலை 1-ஆம் தேதி தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இடம் அறிக்கை சமர்ப்பிக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்த அறிக்கையில் பள்ளிகளில் மதிய உணவு திட்டத்தில் வாழைப்பழம் சேர்ப்பது குறித்து தெரிவிக்க உள்ளதாகவும் கூறினார். இதன்மூலம் விவசாயிகள் வாழ்வாதாரம் செழிக்கும், அவர்கள் பயனடைவார்கள் என்று தெரிவித்தார். இதை தவிர்த்து அரசு பள்ளி மாணவர்களின் சேர்க்கையை உயர்த்துவது, பள்ளிகளின் கட்டமைப்பு தரம், கிராமப்புற பள்ளிகளில் கல்வி பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் தேவையான குடிநீர் வசதி அனைத்தும் அந்த அறிக்கையில் இடம்பெறும் எனவும் தெரிவித்துள்ளார்.