தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவே பாடங்கள் நடத்தப்படுகின்றன. கொரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்த பெற்றோர் கல்வி கட்டணம் செலுத்த முடியாமல் தவித்து வருகின்றனர். இத்தகைய சூழலிலும் தனியார் பள்ளிகள் முழு கல்விக் கட்டணத்தை செலுத்துமாறு வற்புறுத்துவதாக புகார் எழுந்தது.
இதுதொடர்பான வழக்கை விசாரித்த நீதிமன்றம் தவணை முறையில் கல்விக் கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது. கடந்த ஆண்டு பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவு இந்த ஆண்டும் கடைபிடிக்கப்படும் நிலையில், தனியார் பள்ளிகள் 75 சதவீதம் கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது குறித்து பள்ளிக் கல்வித் துறை ஆணையர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கொரோனா காலத்தை கருத்தில் கொண்டு தனியார் பள்ளிகள் 75 சதவீதம் கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும். முதற்கட்டமாக ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் 40 சதவீதமும் பள்ளி தொடங்கி இரண்டு மாதத்திற்குள் 35 சதவீதமும் கட்டணத்தை வசூலிக்கலாம் என குறிப்பிட்டுள்ளார். மேலும், மீதமுள்ள 25 சதவீத கட்டணத்தை வசூலிப்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.