சிபிஎஸ்சி போல் தமிழக பள்ளிகளிலும் பாடத்திட்டங்கள் குறைக்கப்படும் என்று அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா தீவிரமாகப் பரவி வந்ததன் காரணமாக, பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் நடப்பு ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை தொடர்ந்து அனைத்து பள்ளிகளிலும் நடைபெற்று வருகின்றது. மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்று ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா மீண்டும் அதிகரிக்க தொடங்கியதால் சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பின்பே பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு செய்யப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
மேலும் பிளஸ் 2 தேர்வு எழுத இதுவரை 23 மாணவர்கள் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர் என்று அவர் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து சிபிஎஸ்சி போல் தமிழக பள்ளிகளில் பாடத் திட்டங்கள் குறைக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். பாடத்திட்டங்களை குறைக்காமல் பொதுத்தேர்வுகளை அறிவிக்க முடியாது. எத்தனை சதவீதம் குறைக்கப்படும் என்பது பற்றி ஆலோசனை நடைபெற்று வருவதாகவும், இதற்கான முடிவுகள் விரைவில் வெளியாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.