தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஏற்கனவே அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கை நீட்டித்து மேலும் ஒரு வாரத்திற்கு (மே-31 வரை) தளர்வுகளற்ற கடுமையான ஊரடங்கை அமல்படுத்தியிருந்தது . இதனைத்தொடர்ந்து மேலும் ஜூன் 7-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுள்ளது. இதில் யாரும் தேவையின்றி வெளியே சுற்றினால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இருப்பினும் ஒரு சிலர் ஊரடங்கு விதிகளை மீறி வெளியே சுற்றுகின்றனர். இவ்வாறு ஊரடங்கு விதிகளை மீறியதாக தமிழகம் முழுவதும் இதுவரை 22,723 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சென்னையில் மட்டும் 2,670 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 4,400 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் முக கவசம் அணியாமல் நடமாடிய நபர்கள் மீது 3,82,172 வழக்குகளும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத நபர்கள் மீது இதுவரை 13,653 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.