தமிழகம் முழுவதும் பத்து லட்சத்துக்கும் அதிகமான வழக்குகள் ரத்து செய்யப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் கடந்த சில மாதங்களாக அதிமுக அரசு பல்வேறு நலத்திட்டங்களை மக்களுக்கு செய்து வருகிறது.
இந்நிலையில் தமிழகம் முழுவதும் 10 லட்சத்துக்கு அதிகமான வழக்குகள் ரத்து செய்யப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். மத்திய அரசின் குடியுரிமை சட்டத்தை எதிர்த்துப் போராடியவர்கள் மீதான வழக்குகளில் சில வழக்குகளை தவிர மீதி அனைத்தும் ரத்து செய்யப்படும். கொரோனா காலகட்டத்தில் பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. அப்போது அந்தக் கட்டுப்பாடுகளை மீறி செயல் பட்டவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது. அதில் ஆயிரக்கணக்கான வழக்குகள் இடம்பெற்றன. அந்த வழக்குகள் அனைத்தும் ரத்து செய்யப்படும் என அவர் கூறியுள்ளார்.