இலங்கையில் தனிநபர் மீது தாக்குதல் நடத்துபவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்த முப்படையினருக்கு பாதுகாப்பு துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இலங்கையில் தொடர்ந்து போராட்டம் வெடித்து வருகின்றது. இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்த நிலையில் அவரது வீடுகள் அனைத்தையும் போராட்டக்காரர்கள் தீ வைத்து கொளுத்தினர். இலங்கை அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்கள் கொலைவெறி தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து நாடு முழுவதும் கலவரம் வெடித்துள்ளது. இதில் 130 பேர் காயமடைந்துள்ளனர்.
நிலைமை கட்டுக்குள் கொண்டுவர நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. காவல்துறையினருக்கு உதவுவதற்கு ராணுவம் களம் இறக்கப்பட்டுள்ளது. மேலும், மேற்கு மாகாணத்தில் மல்வனை பகுதியில் உள்ள பசில் ராஜபக்சே வீட்டிற்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். இதைத்தொடர்ந்து அங்கு பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இலங்கையில் பொதுமக்களின் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தல், தனி நபர் மீது தாக்குதல் நடத்துதல் போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது துப்பாக்கி சூடு நடத்த பாதுகாப்பு துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு பொதுச்சொத்துக்களை சேதப்படுத்துபவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்துவதற்கு முப்படையினர் தயார் நிலையில் உள்ளனர்.