நாட்டில் ஆசிரியர் பணியில் சிறந்து விளங்கும் ஆசிரியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது. ஆசிரியராக இருந்து குடியரசுத் தலைவராக உயர்ந்த சர்வபள்ளி ராதாகிருஷ்ணனை போற்றும் வகையில் அவரது பிறந்த நாளான செப்டம்பர் 5 ஆம் தேதி ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. அந்நாளில் ஒவ்வொரு ஆண்டும் நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது.
இந்நிலையில் 2021 ஆம் ஆண்டுக்கான தகுதியுடைய ஆசிரியர்கள் இந்த விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. இந்த விருது பெற அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நேரடியாக இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் தமிழ்நாட்டை சேர்ந்த 2 ஆசிரியர்கள் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அதன்படி திருச்சி பிராட்டியூர் அரசு நடுநிலைப் பள்ளி ஆசிரியர் ஆஷா தேவி மற்றும் ஈரோடு மொடக்குறிச்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் லலிதா ஆகியோர் விருதுக்கு தேர்வாகியுள்ளனர்.