தேவர் தங்கக் கவசத்தை வருவாய்துறை வசம் ஒப்படைக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் மதுரை ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், விடுதலைப் போராட்ட வீரர் முத்துராமலிங்கத்தேவரின் சிலைக்கு 2014 ஆம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா 13 கிலோவில் தங்கக் கவசத்தை வழங்கினார். இந்த தங்க கவசமானது மதுரை அண்ணாநகர் பகுதியில் உள்ள வங்கியில் உள்ளது. இந்த தங்க கவசத்தினை ஆண்டுதோறும் அக்டோபர் 30ஆம் தேதி பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் பிறந்த நாளை முன்னிட்டு 3 நாட்களுக்கு முன்பாகவே தங்க கவசத்தினை வங்கியில் இருந்து எடுத்துச் சென்று பசும்பொன்னில் உள்ள அவரது சிலைக்கு அணிவித்து மீண்டும் அந்த தங்க கவசத்தினை கொண்டு வந்து வங்கியில் லாக்கரில் வைப்பது வழக்கம்..
இதற்காக அதிமுக பொருளாளரும், முத்துராமலிங்கத் தேவரின் நினைவிட பொறுப்பாளரும் வங்கியில் கையெழுத்திட்டு தங்க கவசத்தை பெற்று செல்வர். இந்த நிலையில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ பன்னீர் செல்வம் தங்க தவசத்தினை பெரும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். எனவே அதிமுக பொருளாளர் நீக்கப்பட்ட நிலையில் அதிமுக பொருளாளராக தற்போது நியமிக்கப்பட்டுள்ள திண்டுக்கல் சீனிவாசன் ஆகிய என்னிடம் மட்டுமே இந்த தங்க கவசத்தை ஒப்படைக்க வேண்டும் என மனுவில் தெரிவித்திருந்தார்.
இந்த மனுவானது ஏற்கனவே விசாரணைக்கு வரும் பொழுது வங்கி தரப்பிலும், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிட பொறுப்பாளர் தரப்பிலும் நீதிமன்றம் உத்தரவிற்கு கட்டுப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் ஓ பன்னீர்செல்வம் தரப்பில் இதற்காக கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் மீண்டும் இந்த வழக்கானது நீதிபதி பவானி சுப்பராயன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஓபிஎஸ் தரப்பிலும், ஈபிஎஸ் தரப்பிலும் கடுமையான வாதங்கள் விவாதிக்கப்பட்டன.
இதனையடுத்து நீதிபதி இந்த வாதங்களை கேட்டறிந்து வழக்கை முதலில் 3 மணிக்கு ஒத்தி வைத்தார். தொடர்ந்து 4 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தற்போது இந்த வழக்கின் தீர்ப்பானது 4 : 45 மணிக்கு ஒத்திவைக்கப்படுவதாக தெரிவித்தார். இந்நிலையில் அதிமுக உட்கட்சி பிரச்சனையில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று தெரிவித்த நீதிமன்றம் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு அதிமுக சார்பில் தரப்பட்ட தங்க கவசத்தை ராமநாதபுரம் வருவாய்துறை (டிஆர்ஓ) வசம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.