தொடர் கனமழை காரணமாக வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். புதிதாக உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலமானது இன்று சென்னை அருகே கரையைக் கடந்த போதிலும் பல மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகின்றது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் கூறியதாவது, குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் கரையை கடந்தாலும், காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக சில மணி நேரம் நீடிக்கும் என்று தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக பல மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. அதனால் மாணவர்களின் பாதுகாப்பு கருதி நாளை வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக திருப்பத்தூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருவதால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.