தமிழகம் முழுவதும் கடந்த வாரம் முழுவதும் தொடர்ந்து கன மழை கொட்டி தீர்த்தது. அதனால் சாலைகள் அனைத்திலும் மழைநீர் வெள்ளம் போல தேங்கி நின்றது. குறிப்பாக சென்னையில் பெரும்பாலான பகுதிகள் வெள்ளக்காடாக காட்சி அளித்தன. தற்போது வெள்ள நீர் வடிந்து மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் நேற்று இரவு முதல் இடைவிடாது மழை பெய்து வருகிறது.
அதனால் பல்வேறு மாவட்டங்களில் உள்ள நீர்நிலைகள் அனைத்தும் வேகமாக நிரம்பி வருகின்றன. அதன்படி காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை, திருவண்ணாமலை ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள 1022 ஏரிகளில் 806 ஏரிகள் 100% நிரம்பி உள்ளதாக பொதுப்பணித்துறை சார்பில் தகவல் வெளியாகியுள்ளது. 169 ஏரிகள் 75 சதவீதமும், 47 ஏரிகள் 50 சதவீதம் அளவுக்கு நிரம்பி உள்ளதாகவும் பாலாறு வடிநில கோட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் ஏரிக்கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.