நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் 15 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கான பதிவு மத்திய அரசின் கோவின் இணையதளத்தில் புத்தாண்டு அன்று தொடங்கியது. சிறார்களுக்கு உள்நாட்டு தயாரிப்பான கோவக்சின் செலுத்தப்பட உள்ள நிலையில், தடுப்பு ஊசி செலுத்தி 30 நிமிட கண்காணிப்பில் வைத்து பின்னர் அவர்கள் அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.
அதனைத் தொடர்ந்து முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திய 28 நாட்களுக்கு பிறகு அவர்களுக்கு இரண்டாவது டோஸ் செலுத்தப்பட உள்ளது. மேலும் சிறார்களுக்கு தனியாக தடுப்பூசி மையங்கள் அமைப்பது மற்றும் அவர்களுக்கு தடுப்பூசி செலுத்துபவர்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்க வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. இந்நிலையில் நாடு முழுவதும் இன்று காலை முதல் 15 முதல் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது.